Primary tabs
முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை - 600 113.
கருத்துரை
உலகின் தொன்மையான மொழிகள் சிலவற்றில்
ஒன்றாகவும் இன்றளவும் மக்கள்
வழக்காற்றில் உள்ள மொழியாகவும் விளங்குவது
தமிழ். எனவே தமிழ் மொழி
பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப்
புதுமையாகவும் விளங்கும் பேறுபெற்றது.
இங்ஙனம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும்
நிலைபேற்றிற்கும் அடிப்படையாக
அமைந்தவற்றுள் முதலிடம் பெறுவது இலக்கணம்.
நீண்ட இலக்கண வரலாறு உடைய மொழி தமிழ், நமக்குக்
கிடைத்திருக்கும்
பழைய இலக்கணமாகிய தொல்காப்பியத்தின்
கூற்றுப்படி தொல்காப்பியத்திற்கு
முன்னமே இலக்கண நூல்கள் இருந்துள்ளமை
தெளிவாகிறது.
எழுத்து, சொல், பொருள் என்னும் முப்பெரும்
அதிகாரங்களைக் கொண்ட
தொல்காப்பியம் தமிழ் மொழிக்குக் கிடைத்த முதல்
முழு இலக்கண நூலாகும்.
தொல்காப்பியம் மொழிக்கு அடைப்படையாக அமைந்த
இலக்கணக் கூறுகளை
விளக்குவதுடன் மேலும் புதிய இலக்கண நூல்கள்
தோன்றவும் வழி வகுத்தது.
தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றிய
இலக்கண நூல்களுள் சிறப்பாகக்
குறிப்பிடத்தக்க நூல் நன்னூலாகும். இந்த
நன்னூல் தொல்காப்பியத்தின் வழி வந்தது
மட்டுமல்ல, பின்னர் வந்த இலக்கண நூல்களைக்
காட்டிலும் சிறந்தது என்பர் அறிஞர்.
நன்னூல் என்பதற்கு நல்ல நூல் என்பது
பொருளாகும். தன்மையால் பெயர்
பெற்ற நூல் நன்னூலாகும். நன்னூலை ஆக்கிய
பவணந்தி எனும் புலவர் பெருமான்
சமண சமயத்தைச் சார்ந்தவர்.