Primary tabs
ii
யாப்பினைப் பற்றிய பண்டைய நூல்கள் யாவும் மறையவே, யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்ற யாப்பிலக்கண நூல்கள் வெளிவந்தன. அணி பற்றியமைந்த அணிநூல் என்பது மறையவே, தண்டியலங்காரம் என்ற நூல் வெளிப்போந்தது. பொருளிலக்கணத்தின் அகப்பொருட் செய்திகளைத் தொடர்பாக அமைத்த நம்பியகப் பொருளும், புறப்பொருளை விரித்துக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலையும் வெளிவந்தன. இவற்றை யொட்டிச் சோழ மன்னன் வீர ராசேந்திரன் (கி. பி. 1062-70) காலத்தில் பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரனால் இயற்றப்பட்ட கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த வீரசோழியம், வடமொழி மரபை மிகுதியும் தழுவி எழுத்துச் சொற்பொருள் யாப்பணி என்ற ஐந்து பிரிவுகளை உடைய முழு நூலாகத் தோற்றமளித்தது. அந் நூலின்கண் பிற நூல்களில் காணக் கிடையா அருஞ் செய்திகள் பல உளவேனும், வடமொழி மரபினைப் பெரிதும் தழுவியதால் அந்நூல் தமிழ் மக்களிடையே பெரிதும் பரவும் வாய்ப்பினை இழப்பதாயிற்று. பின், எழுத்துச்சொல்லெனும் இரண்டனையுமே விளக்கிக் கூறும் நன்னூலும் சின்னூலும் வெளிவந்தன. இந்நிலையில், கற்றுத் துறைபோகிய இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர், கல்லாடர் முதலியோர் தொல்காப்பியம் முழுமைக்கும் பகுதிகளுக்குமாக உரைவரைந்து பல அரிய செய்திகளை வெளிப்படுப்பாராயினர். அதனால் தொல்காப்பியப் பயிற்சியும் தமிழகத்தில் ஓரளவு பரவுவதாயிற்று. இக்காலையில் பிரபந்த வகைகளுக்கு இலக்கணம் வகுக்கும் பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், முதலிய பாட்டியல் நூல்களும் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தன. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய மாறன் அகப்பொருள், மாறன் அலங்காரம் என்ற நூல்களையும் மக்கள் ஏற்றுச் சுவைத்தனர்.