Primary tabs
நூலாசிரியர் வரலாறு
மன்னுதென் கமலை வைத்திய நாதன்
பொன்னடிக் கமலப் போதினைச்
சென்னியில் சேர்த்துதும் மதிசிறந் திடவே.
என்பது இலக்கண விளக்க நூலின் முகப்பு ஏட்டில் காணப்படும் செய்யுளாகும்.
நூல் என்ற சொல் பழங்காலத்தில் இலக்கணங்களையே குறிக்கும் சொல்லாயிருந்தது. அக் காலத்தில் காப்பியங்கள் ‘தொடர்நிலைச் செய்யுள்’ என்ற பெயராலேயே வழங்கப்பட்டன. இதனைச் சீவகசிந்தாமணியின் தொடக்கச் செய்யுளுக்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையான் உணர்க.
இலக்கண விளக்க நூலினை வரைந்து தமிழுலகத்துக்கு அளித்த வைத்தியநாத தேசிகர் சிறந்த கவிஞராகவும், நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், போதகாசிரியராகவும், ஞானாசிரியராகவும் விளங்கிய சிறப்புடையவர் ஆவார்.
“திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் [அடியேன்”
எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில் தொகையடியார்களுள் ஒரு