Primary tabs
ix
வைத்தியநாதரின் பெருங்கல்வியையும், அருங்குணத்தையும் கண்ட அளவில், அவரிடம் பெருமதிப்புக் கொண்டு தம் புதல்வர்களுக்குக் கல்வி பயிற்றும் ஆசிரியராக அவரை அமர்த்தினார். பல்லாண்டுகள் முறையாகத் தமிழ் பயிற்றுவித்த நம் புலவர் பெருமானார், அச்சிறார்களுக்கு முன்னூலாகிய தொல்காப்பியத்தொடு பின்னூலாகிய நன்னூற் செய்திகள் முரணுமிடங்களைக் கண்டு அவற்றை முரண்பட மாற்றிப் புதுக்கி, நன்னூலின் மயிலைநாதருரை முரண்பட்ட இடங்களை யகற்றிப் புத்துரை யமைத்துப் பாடஞ் சொல்லிய வகையில் பற்பலவிடங்கள் புதுக்கப்படவே, நன்னூலின் வடிவம் மாறப் பின் பொருளிலக்கணச் செய்திகளும் முறையே இணைக்கப்பெற்ற ‘இலக்கண விளக்கம்’ என்ற ‘குட்டித் தொல்காப்பியம்’ வெளிப் போந்தது. தொல்காப்பியத்திற்கும் நன்னூற்கும் உரை வரைந்தவர்கள் நூலாசிரியர்தம் கருத்துக்களை உள்ளவாறு உணராமல் தம் அறிவுத் திறனுக்கேற்ப வரைந்த இடங்கள் பலவாக இருப்பதனை ஓர்ந்து, இவர் தாம் அமைத்த இலக்கண விளக்க நூலுக்குத் தாமே உரைவரைவாராயினார். இங்ஙனமே பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய சாமிநாத தேசிகரும், சுப்பிரமணிய தீக்கிதரும் தாம் வரைந்த இலக்கணக்கொத்து பிரயோகவிவேகம் என்ற அரிய நூல்களுக்குத் தாமே உரை வரைந்து வெளியிடுவாராயினர். இங்ஙனம் நூலாசிரியர் தாமே தம் நூலுக்கு உரை வரைய வேண்டிய தேவையும், இம்மூவரும் தம் நூலுக்குத் தாமே உரை வரைந்த செய்தியும் இலக்கணக்கொத்து நூலில் கீழ்க்கண்ட பகுதியில் குறிக்கப்பட்டிருத்தல் காண்க.
“நூலா சிரியர் கருத்தினை நோக்காது
ஒருசூத் திரத்திற் கொவ்வொரா சிரியர்
ஒவ்வொரு மதமாய் உரைஉரைக் குவரே:
அவ்வுரை யதனுள் அடுத்தவா சகங்கட்கு