தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


xxx

பல செய்திகளையும், உயிர்மயங்கியல் நூற்பாக்களில் தாம் கொண்ட மிகைச் சொற்களால் அவர் ஏற்றியுரைக்கும் பல செய்திகளையும் இந்நூற்பாவின் உரையிலேயே எடுத்துக்கூறும் நம் ஆசிரியர் உயர்திணை வினை பற்றிய புணர்ச்சியினையும் ஈண்டே சுட்டிச் செல்லுதல் பாராட்டத் தக்கது.

அடுத்து, பொதுவாக விளிப்பெயர்களும் இயல்பு புணர்ச்சியே பெறற்பாலன என்பதனை நூற்பாவாயிலாக விளக்கப்புக்க நம் ஆசிரியர், தொல்காப்பியச்சொற்படல விளிமரபு என்ற இயல் உரையில் உயர்திணைப் பெயர்கள் அஃறிணைப் பெயர்கள் விரவுப்பெயர்கள் ஆகிய யாவும் விளியேற்றல் பற்றி நச்சினார்க்கினியர் உரைத்தன பலவற்றையும் உட்கொண்டு ஈண்டே நுவலுந் திறன் குறித்துணரத் தக்கதாகும்.

பின், முன்னிலை ஏவல்வினைகள் இயல்பாகவும் உறழ்வாகவும் புணருமாற்றைக் குறிப்பிடும் இவர், ‘ஒள என வரூஉம் உயிரிறு சொல்லும்’ என்ற தொல்காப்பிய நூற்பாவினைத் தம் நூலியைபுக்கேற்பச் சிறிது மாற்றி, உரை வரைந்து எடுத்துக்காட்டும் தருகிறார்.

இரண்டாம் வேற்றுமைத் திரிபுபற்றிய தொல்காப்பிய நூற்பா, நச்சினார்க்கினியர்தம் உரையுள் ஏற்பன கொண்டு அடுத்து இடம்பெறுகிறது.

பின், மூன்றாம்வேற்றுமைத் திரிபுபற்றி நன்னூலை ஒட்டி நூற்பாவினை அமைக்கும் இவர், அதனை நன்கு விளக்கி அது வேறுபடுமாற்றைப் பொதுவிதிச் செய்தி காட்டி நிறுவுகிறார்.

அல்வழிப்புணர்ச்சியில் இகர ஐகார ஈறுகள் எழுவாய்த்தொடரில் பெரும்பான்மையும் இயல்பாகவும், சிறு பான்மை உறழ்ந்தும், இருபெயரொட்டில் மிக்கும் புணரும் புணர்ச்சியினைத் தொல்காப்பிய நூற்பாக் கொண்டே விளக்குகிறார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 09:53:11(இந்திய நேரம்)