Primary tabs
XLI
நூற்பா முறைவைப்பிலும் சிறிது வேறுபாடு காட்டி, ஆட்டாண்டு இடன் நோக்கிச்செய்திகள் பலவற்றையும் செறித்துத் தாம் உட்கொண்ட கருத்துக்களையெல்லாம் தெரித்து உரைவரைதல் பிறரால் இயலாது என்பதனை முற்ற உணர்ந்து, தம் கருத்து முற்றும் வகையான் தாமே அரியதோர் உரை வரைந்து நூல் நயம் முற்ற அமைத்து, பின்தோன்றும் இலக்கண ஆசிரியர்களுக்கும் நூற்பாக்களொடு உரையும் வரைந்து நூலியற்றுதற்கு வழிகாட்டியாக அமைந்தார் என்பது நன்கு உணரப்படும்.
இனி, இவ்வெழுத்துப் படலத்தில் இடம் பெற்றுள்ள தொல்காப்பிய நூற்பாக்கள், நன்னூல் நூற்பாக்கள், சிறிது மாற்றம் பெற்ற நன்னூல் நூற்பாக்கள், இவ்வாசிரியரே யாத்தநூற்பாக்கள் ஆகியவற்றை நிரல்படக் காண்போம்.
இந்நூலின் எழுத்துப்படலத்தில் தொல்காப்பிய நூற்பாக்கள் இருபத்தொன்றும், நன்னூல் நூற்பாக்கள் எழுபத்திரண்டும், சிற்சில மாறுதலுடன் கூடிய நன்னூல் நூற்பாக்கள் இருபத்தெட்டும் இடம் பெறுகின்றன ஏனைய நூற்பாக்கள் இவ்வாசிரியர் யாத்தனவேயாம்.