Primary tabs
iv
செய்யுள் கே. ப. பிரதியிலும் க. த. பிரதியிலும் ‘மொழி காரணமாகி’ என்று தொடங்கி எழுத்தின் பொது விளக்கமும் எழுத்ததிகாரப் பகுப்பும் பெயரின் விரியும் விளக்கப்பட்டுள்ளன. பி. பொ. பிரதியில் ‘பெயர், எண், முறை’ என்று தொடங்கி எழுத்ததிகாரப் பாகுபாடும் பிற்பகுதியில் எழுத்தின் பொது விளக்கமும், பெயரின் விரியும் தரப்பட்டுள்ளன. பெயர்களைத் தொகுத்துச் சொல்வதிலும் இரண்டிற்கும் வேறுபாடு காணப்படுகின்றன. கே. ப. பிரதியிலும் க. த. பிரதியிலும் விடம், அமுதம், ஆண், பெண், அலி என்ற யாப்பதிகாரத்தில் கூறப்படும் பாகுபாடும் எழுத்ததிகாரத்திலே சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பிரிவு பி. பொ. பிரதியில் காணப்படவில்லை.
எழுத்தாக்க மரபு 3ஆம் சூத்திரம் ‘எண், முதல் சார்பு இரண்டு’ என்று கே. ப. பிரதியிலும் க. த. பிரதியிலும் தொடங்கி எழுத்துக்களின் எண்ணின் தொகையும் வகையும் விரியும் விளக்கப்பட்டுள்ளன. பி. பொ. பிரதியிலோ ‘அகராதி ஈராறு உயிர்’ என்று ஆரம்பித்து எழுத்துக்களின் எண்ணின் தொகையும் வகையும் விரியும் விளக்கியதோடு ‘முறை’ என்ற வேறொரு பொருளையும் விளக்குகிறது. இவ்வாறான வேறுபாடுகள் வேறுபல செய்யுள்களிலும் அமைந்துள்ளன. அவ்வாறே இலக்கணக் கோட்பாட்டு முறையிலும் இரண்டிற்கும் (பி. பொ. பிரதி ஒன்று; க. த. பிரதியும் கே. ப. பிரதியும் மற்றொன்று) வேறுபாடு காணப்படுகிறது. இறந்தகால இடைநிலைகளை விளக்கும் முறையில் (பி. பொ. பி. 25-ஆம் செ. பக். 44, க. த. பி. பதமரபு 4) அமைந்துள்ள வேறுபாட்டால் உணரலாம்.
இவ்வாறு எண்ணிக்கையிலும், கருத்தைக்கூறும் முறையிலும், கருத்திலும், கோட்பாட்டிலும் வேறுபாடுகள் பி. பொ. பிரதிக்கும், க. த. பிரதி, கே. ப. பிரதி ஆகிய இரண்டுக்கும் காணப்படுவதால் பி. பொ. பிரதி வேறு ஏதோ ஒரு மூலப் பிரதியிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணவேண்டியுள்ளது.