Primary tabs
XLi
5. 2. 3. மொழி வளர்ச்சி பற்றிய புதுமை
பெரும்பாலான தமிழ் இலக்கண நூல்கள் பிற்காலத்தில் மொழியியல் ஏற்பட்ட வளர்ச்சியைப் புறக்கணித்தே வந்துள்ளன. அவற்றுள் இரண்டு வகை உள்ளது. ஒன்று எல்லா பிற்கால இலக்கண ஆசிரியர்களும் புறக்கணித்த வளர்ச்சி. முன்னிலைப் பன்மை வடிவமான ‘நீங்கள்’ (இது அப்பர் தேவாரத்திலேயே (445:7) வந்துள்ளது) என்பதும், செய்தால் எனும் வாய்ப்பாட்டு வினையெச்சமும் (இது சங்க காலத்திலேயே - கண்டால் - புறம் 390.25. மடுத்தால் - பரிபாடல் 20.42 வந்துள்ளது) - உதாரணமாகக் கூறலாம். மற்றொன்று ஒரு இலக்கண ஆசிரியர் மொழி வளர்ச்சியைக் கவனித்துக் கூறியிருந்தும் அவர்க்குப் பின் வந்தோர் புறக்கணிப்பது,
சகர முதன்மொழி வருவதை வீரசோழியமும் (7) நன்னூலும் (102) கூறியிருந்தும் இலக்கண விளக்கம் (246) புறக்கணித்து விட்டது. இந்நிலையில் பிற்கால இலக்கண ஆசிரியர் தனக்கு முன்னால் கூறப்பட்ட மொழி வளர்ச்சியை ஒத்துக் கொள்வதே சிறப்பானதாகக் கருத வேண்டும் போலத் தோன்றுகிறது. இதற்கு முன்னால் உள்ள இலக்கண ஆசிரியர்கள் கூறாத தமிழ் அமைப்பு உண்மைகளைச் சாமி கவிராயர் குறிப்பிட்டவையே இங்கு எடுத்துச் சொல்லப்படுகின்றது.
பிறப்பியல்:
றகரத்திற்கு ‘ஒத்துதல்’ என்ற முயற்சியைக் கூறியுள்ளார். நன்னூலார் ‘நனி உறில்’ (நன் 86) என்று குறிப்பிட்டதை ஆடலொலி (Trill) என்று விளக்குவர். ஒத்துதல் என்பது ரகரத்தைப்போல நாவின் நுனி மேல் அண்ணத்தை ஒரு தடவை தொடுதலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அப்படியாயின் இன்று றகரமும், ரகரமும் உச்சரிப்பில் ஒன்றாக இருக்கிற தன்மையே பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.