Primary tabs
பதிப்பாசிரியர் முன்னுரை
பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த இலக்கணப் பெரும் புலவர் மூவருள் சாமிநாத தேசிகரும் ஒருவர். இவர் தமிழின் சொல்லிலக்கணம் பற்றிப் பல இலக்கண நூல்களிலும் உரைகளிலும் இலை மறை காய் போலப் பொதிந்துகிடந்த அருஞ்செய்திகள் பலவற்றைத் தொகுத்து இலக்கணக்கொத்து என்ற அரிய சிறு நூல் எழுதி அதற்குத் தாமே உரையும் வரைந்துள்ளார்.
இலக்கணக்கொத்து என்ற இந்நூல் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களால் நன்முறையில் பதிப்பிக்கப்பெற்றது. சுருக்கமான உரையையுடைய இந்நூல் இக்காலத்தவர் கற்றற்கு எளிமைத்தாய் இல்லை.
‘‘அச்சுப்படியோடு தஞ்சை சரசுவதிமகால் கையெழுத்துப் படியையும் ஒப்பு நோக்கிப் போதிய விளக்கவுரையுடன் இந்நூலைப் பதிப்பித்தல் வேண்டும்; தொடக்கத்தில் நூற் செய்தி, உரைநலன்கள் முதலியவை நன்கு விளக்கி வரையப்படல்வேண்டும்; நூற்பாக்களும், உரைத் தொடர்களும் கற்பார் நலம் கருதிச் சந்தி பிரிக்கப்படல் வேண்டும்; பல அடிகளான் அமைந்த நூற்பாத் தொடர்களைப் பிரித்துத் தனித்தனியே அமைத்து அவற்றை ஒட்டி அவற்றின் உரை பதிப்பிக்கப்படல் வேண்டும்;