எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஐவகையாகப் பகுக்கப்பட்டு விளங்கும் அவற்றுடன் இந்நூலாசிரியர் புதியன புகுதலாகப் புலமை என்னுமொன்றையும் இணைத்து ஆறுவகையாகக் கூறத்தொடங்கி முதற்கண் தமிழ் எழுத்தினது இலக்கணம் கூறப்புகுகிறார். இம்முதற்பகுதி உருவோசை இயல்பு, நிலையியல்பு, புணர்ச்சியியல்பு என்னும் மூன்று இயல்களை உடையது.
தமிழ் எழுத்துகளின் உருவத்தினது மற்றும் ஒலியினது இயல்பினைக் கூறுவதால் இவ்வியல் இப்பெயர்த்தாயிற்று. இயல்பு என்ற சொல்லுக்கு இலக்கணம் என்பது பொருள். “ஆயர்மகளிர் இயல்பு உரைத்து” என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர், “ஆயர் மகளிரை வரைந்து கொள்ளும் இலக்கணத்தை அறிவித்து” என உரை கூறுவதால் இஃது அறியப்படும். (முல்லைக்கலி 11:22). தமிழ் எழுத்துகளின் என்பதை அதிகாரத்தாற் பெற்றாம். இயல்பினைக் கூறும் நூற்பகுதியை இயல்பு என்றது ஆகுபெயர். இவ்வியல்பு தொகை, வகை என்னும் இரண்டு உட்பிரிவுகளை உடையது.
எழுத்துகளைப் பற்றிய பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதால் இப்பிரிவு இப்பெயர் பெற்றது. அன்றியும் அவை இத்துணைய எனத் கூறப்பட்டதால் இப்பெயரமைந்தது என்றும் ஆம். இதன் தலைச்சூத்திரம் தற் சிறப்புப் பாயிரம் ஆகும்.