இலக்கண நூற்பா அகரநிரல், மேற்கோள் இலக்கியப்பா
அகரநிரல் ஆகியன இடம்பெற்றுள்ளன. இப் பதிப்பைக்
கண்ணுறும் அறிஞர்கள் இதன் நிறைகுறைகளைத்
தெரிவித்தால் அடுத்த பதிப்பு இன்னமும் செம்மையாக
அமையப் பேருதவியாக இருக்கும்.
ஏழாமிலக்கணத்தை வெளியிடவேண்டும் எனக் கேட்டுக்
கொண்ட சுவடிக்கலைஞர் புலவர் திரு. தி. மு.
சங்கரலிங்கம் அவர்களே இப்பதிப்பிற்கு
முதற்காரணமாவார். இந்நூலின் முதல் 510 நூற்பா
உரையைக் கவனமாகப் பரிசீலித்துப் பாராட்டிய தவத்திரு
முருகதாச அடிகளும் இப்பதிப்பில் பேரார்வம்
கொண்டிருந்தார். இப்பதிப்பிற்குப் பயன்படுத்திக்
கொள்ளத் திருவாமாத்தூர் மடாலயத்திலிருந்து
அறுவகையிலக்கண, ஏழாமிலக்கண மூல ஏட்டுச் சுவடிகளைக்
கொடுத்துதவியதும் இவர்களே. இவ்வுரைப் பதிப்பு
வெளியாகும் இன்று இவர்கள் இருவரும் நம்மிடையே
இல்லை. குருவருளில் இரண்டறக்கலந்து விட்ட அவர்களை
நன்றியுடன் நினைத்து வணங்குகிறேன்.
இவ் வுரைப்பதிப்புப் பணியை எனக்கு அளித்தும், இதன்
மாதிரிப்பகுதியைக் கண்ணுற்றுத் தக்க அறிவுரைகள்
வழங்கியும், பணி முடியும்வரை இடைவிடாது விசாரித்து
ஊக்கமளித்தும் வந்த தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் முதுமுனைவர் வ. அய். சுப்பிரமணியம்
அவர்களுக்கு முதலில் என்னுடைய உளமார்ந்த நன்றியைப்
பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓர் அரிய அணிந்துரையுடன் இந்நூலைத் தமிழ் கூறும்
நல்லுலகத்திற்கு வழங்குகின்ற மாண்புமிகு
துணைவேந்தர் முனைவர் சி. பாலசுப்பிரமணியம்
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைப் பணிவோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தொடர்ந்து
எனக்கு ஊக்கமளித்துவந்த முன்னாள்
சுவடிப்புலத்தலைவர் பேரா கே. எம். வேங்கடராமையா
அவர்களுக்கு என் நன்றியைப் பணிவுடன்
உரித்தாக்குகிறேன்.