தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathupattu


மதுரைக் காஞ்சி

(தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை
மாங்குடி மருதனார் பாடியது)

இயற்கை வளம்
ஓங்குதிரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பு ஆக,
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியல் ஞாலத்து,
வல மாதிரத்தான் வளி கொட்ப,
5
வியல் நாள்மீன் நெறி ஒழுக,
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்,
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க,
மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்க,
10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த,



செயற்கைச் செழிப்பு நிலை


நோய் இகந்து நோக்கு விளங்க;
மே தக, மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு;
15
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து,
உண்டு தண்டா மிகு வளத்தான்,
உயர் பூரிம விழுத் தெருவில்,
பொய் அறியா, வாய்மொழியால்
புகழ் நிறைந்த, நல் மாந்தரொடு
20
நல் ஊழி அடிப் படர,
பல் வெள்ளம் மீக்கூற,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!


அகத்தியரின் வழிவந்த சான்றோன்


பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர்
25
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட,
அஞ்சு வந்த போர்க்களத்தான்,
ஆண் தலை அணங்கு அடுப்பின்,
வய வேந்தர் ஒண் குருதி
30
சினத் தீயின் பெயர்பு பொங்க,
தெறல் அருங் கடுந் துப்பின்,
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்,
தொடித் தோள் கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு,
35
நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர,
அமர் கடக்கும் வியன் தானை
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின்
40
தொள் முது கடவுள் பின்னர் மேய,
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந!



வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்


நால் வகைப் படைகளின் வலிமை

விழுச் சூழிய, விளங்கு ஓடைய,
கடுஞ் சினத்த, கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய,
45
வரை மருளும் உயர் தோன்றல,
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்;
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்;
50
வாம் பரிய கடுந் திண் தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்;
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்;



நெடியோனின் போர்த் திறமை


இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப்
55
பொருது, அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி,
60
பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்!


மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை


மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை;
அருங் குழு மிளை, குண்டு கிடங்கின்,
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்,

65

நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உமிழ், அயில், அருப்பம்
தண்டாது தலைச் சென்று,
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென் குமரி வட பெருங்கல்
70
குண குட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை;


கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி


வான் இயைந்த இரு முந்நீர்ப்
75
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து,
கொடும் புணரி விலங்கு போழ,
கடுங் காலொடு, கரை சேர,
நெடுங் கொடி மிசை, இதை எடுத்து,
இன் இசைய முரசம் முழங்க,
80
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெரு நாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை,
85
தெண் கடல் குண்டு அகழி,
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!



குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர


நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் இசை, ஏற்றத்
90
தோடு வழங்கும் அகல் ஆம்பியின்,
கயன், அகைய வயல் நிறைக்கும்,
மென் தொடை வன் கிழாஅர்,
அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி,
இரும் புள் ஓப்பும் இசையே என்றும்,
95
மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப,


பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்


ஒரு சார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு,
உரு கெழு பெருஞ் சிறப்பின்
100
இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்,
பொலந் தாமரைப் பூச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே!
105


முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு


கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்,
வரும் வைகல் மீன் பிறழினும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
நெல்லின் ஓதை, அரிநர் கம்பலை,
110
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே, என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பௌவத்து,
நிலவுக் கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்,
115
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை,
இருங் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு,
ஒலி ஓவாக் கலி யாணர்
முதுவெள்ளிலை



முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப,
தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை


மீக்கூறும்,
வியல் மேவல் விழுச் செல்வத்து,
120
இரு வகையான், இசை சான்ற,
சிறுகுடிப் பெருந் தொழுவர்,
குடி கெழீஇய நால் நிலவரொடு,
தொன்று மொழிந்து, தொழில் கேட்ப
கால் என்னக் கடிது உராஅய்,
125
நாடு கெட எரி பரப்பி,
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து,
அரசு பட அமர் உழக்கி,
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே!
130


கொற்கைக்குத் தலைவன்


நட்டவர் குடி உயர்க்குவை;
செற்றவர் அரசு பெயர்க்குவை;
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்,
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்,
135
இலங்கு வளை, இருஞ் சேரி,
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து,
நல் கொற்கையோர் நசைப் பொருந!


செழியன் பரதவரை வென்றமை


செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று,
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,
140
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி,
புலவு வில், பொலி கூவை,
ஒன்று மொழி, ஒலி இருப்பின்,
தென் பரதவர் போர் ஏறே!


பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி


அரிய எல்லாம் எளிதினின் கொண்டு,
145
உரிய எல்லாம் ஓம்பாது வீசி,
நனி புகன்று உறைதும் என்னாது, ஏற்று எழுந்து,
பனி வார் சிமையக் கானம் போகி,
அக நாடு புக்கு, அவர் அருப்பம் வௌவி,
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து,
150
மேம்பட மரீஇய வெல் போர்க் குருசில்!


பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை


உறு செறுநர் புலம் புக்கு, அவர்
கடி காவின் நிலை தொலைச்சி,
இழிபு அறியாப் பெருந் தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய,
155
நாடு எனும் பேர் காடு ஆக,
ஆ சேந்த வழி மா சேப்ப,
ஊர் இருந்த வழி பாழ் ஆக,
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப,
160
அவை இருந்த பெரும் பொதியில்,
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பு ஆட,
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின்,
165
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ,
கொழும் பதிய குடி தேம்பிச்
செழுங் கேளிர் நிழல் சேர,
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரல,
170
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை,
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று, ஊர்தர,
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்
பல் மயிர்ப் பிணவொடு கேழல் உகள,
வாழாமையின் வழி தவக் கெட்டு,
175
பாழ் ஆயின, நின் பகைவர் தேஎம்.


பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்


எழாஅத் தோள் இமிழ் முழக்கின்,
மாஅத் தாள், உயர் மருப்பின்,
கடுஞ் சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் தானையொடு
180
முருகு உறழப் பகைத்தலைச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ,
பெயல் உறழக் கணை சிதறி,
பல புரவி நீறு உகைப்ப,
வளை நரல, வயிர் ஆர்ப்ப,
185
பீடு அழியக் கடந்து அட்டு, அவர்
நாடு அழிய எயில் வௌவி,
சுற்றமொடு தூ அறுத்தலின்,
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப,
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி,
190
அரசியல் பிழையாது அற நெறி காட்டி,
பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது,
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழி வழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்!
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
195
தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம்!


செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை 
அறிவுறுத்தத் தொடங்குதல்


உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே;
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்,
200
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே;
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும்,
பழி நமக்கு எழுக என்னாய், விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே;
205
அன்னாய்! நின்னொடு, முன்னிலை, எவனோ?
கொன் ஒன்று கிளக்குவல், அடு போர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!
கெடாது நிலைஇயர், நின் சேண் விளங்கு நல் இசை!


உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்


தவாப் பெருக்கத்து அறா யாணர்,
210
அழித்து ஆனாக் கொழுந் திற்றி
இழித்து, ஆனாப் பல சொன்றி,
உண்டு, ஆனாக் கூர் நறவின்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப்
215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி
விறலியர் வறுங் கைக் குறுந் தொடி செறிப்ப
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ,
220
மறம் கலங்கத் தலைச் சென்று,
வாள் உழந்து, அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின்,
225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்,
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக,
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப,
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார்,
230
பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படு கண் முரசம் காலை இயம்ப,
வெடி படக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த,
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த்
235
திரை இடு மணலினும் பலரே,உரை செல
மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே!


மருத நில வளப்பம்


வலைஞர் இயல்பு


அதனால், குண கடல் கொண்டு குட கடல் முற்றி,
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி,
240
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப,
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து,
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின், தாங்காது,
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி
245
நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி,
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி;
ஒளிறு இலஞ்சி; அடை நிவந்த
முள் தாள சுடர்த் தாமரை,
கள் கமழும் நறு நெய்தல்,
250
வள் இதழ் அவிழ் நீலம்,
மெல் இலை அரி ஆம்பலொடு,
வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கை;
கம்புள் சேவல் இன் துயில் இரிய,
வள்ளை நீக்கி, வய மீன் முகந்து,
255
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்
வேழப் பழனத்து நூழிலாட்டு,
கரும்பின் எந்திரம், கட்பின், ஓதை


மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்


அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே,
260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன் கை வினைஞர் அரிபறை, இன் குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை, ஒலி கொள் ஆயம்
ததைந்த கோதை தாரொடு பொலியப்
265
புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும்,
அகல் இரு வானத்து இமிழ்ந்து, இனிது இசைப்ப,
குருகு நரல, மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு,
மருதம் சான்ற தண் பணை சுற்றி, ஒரு சார்
270


முல்லை நிலக் காட்சிகள்


சிறு தினை கொய்ய, கவ்வை கறுப்ப,
கருங் கால் வரகின் இருங் குரல் புலர,
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர,
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப
பெருங் கவின் பெற்ற சிறு தலை நௌவி
275
மடக் கண் பிணையொடு மறுகுவன உகள,
சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல்,
பாஅயன்ன பாறை அணிந்து,
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை தொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து,
280
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய்,
மணி மருள் நெய்தல், உறழ, காமர்
துணி நீர் மெல் அவல், தொய்யிலொடு மலர,
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப,
முல்லை சான்ற புறவு அணிந்து, ஒரு சார்
285


குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்


நறுங் காழ் கொன்று, கோட்டின் வித்திய
குறுங் கதிர்த் தோரை, நெடுங் கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி;
இஞ்சி, மஞ்சள், பைங் கறி, பிறவும்,
பல் வேறு தாரமொடு, கல்கத்து ஈண்டி
290
தினை விளை சாரல் கிளி கடி பூசல்,
மணிப் பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்,
சேணோன் அகழ்ந்த மடி வாய்ப் பயம்பின்
வீழ் முகக் கேழல் அட்ட பூசல்,
295
கருங் கால் வேங்கை இருஞ் சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல், இருங் கேழ்
ஏறு அடு வயப் புலிப் பூசலொடு, அனைத்தும்,
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட,
கருங் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து,
300
அருங் கடி மா மலை தழீஇ, ஒரு சார்


பாலை நில இயல்பு


இரு வெதிர்ப் பைந் தூறு கூர் எரி நைப்ப,
நிழத்த யானை மேய் புலம் படர,
கலித்த இயவர் இயம் தொட்டன்ன,
கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து,
305
அருவி ஆன்ற அணி இல் மா மலை,
வை கண்டன்ன புல் முளி அம் காட்டு,
கமஞ் சூழ் கோடை விடரகம் முகந்து,
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை;
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி,
310
உவலைக் கண்ணி, வன் சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப;
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து,
பாலை சான்ற, சுரம் சேர்ந்து, ஒரு சார்


நெய்தல் நில இயல்பு


முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம்,
315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை,
பரதர் தந்த பல் வேறு கூலம்,
இருங் கழிச் செறுவின், தீம் புளி, வெள் உப்பு,
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக் கண் துணியல்,
320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந் தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார்,
புணர்ந்து, உடன் கொணர்ந்த புரவியொடு, அனைத்தும்,
வைகல்தோறும் வழிவழிச் சிறப்ப,
நெய்தல் சான்ற வளம் பல பயின்று, ஆங்கு,
325
ஐம் பால் திணையும் கவினி அமை வர


மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்


பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்


முழவு இமிழும், அகல் ஆங்கண்,
விழவு நின்ற வியல் மறுகின்,
துணங்கை, அம் தழூஉவின், மணம் கமழ் சேரி,
இன் கலி யாணர், குழூஉப் பல பயின்று, ஆங்கு,
330
பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்


பெரும்பாணர் வாழும் இருக்கை


கலை தாய, உயர் சிமையத்து,
மயில் அகவும், மலி பொங்கர்,
மந்தி ஆட, மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்,
335
இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு மணல்
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்,
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்,
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்,
அவிர் அறல், வையைத் துறை துறை தோறும்
340
பல் வேறு பூத் திரள் தண்டலை சுற்றி,
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்


அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்


நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும்,
345
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்,
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த,
அண்ணல் யானை, அடு போர் வேந்தர்
இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழிய,
பல் மாறு ஓட்டி, பெயர் புறம் பெற்று,
350
மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்,
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை,
தொல் வலி நிலைஇய, அணங்குடை நெடு நிலை,
நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு,
355
வையை அன்ன வழக்குடை வாயில்,
வகை பெற எழுந்து வானம் மூழ்கி,
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல்,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்


பல் வகைக் கொடிகள்


பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப,
360
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல,
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை,
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து,
365
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல் கொடி,
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள,
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி,
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு
புலவுப் படக் கொன்று, மிடை தோல் ஓட்டி,
370
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி,
கள்ளின் களி நவில் கொடியொடு, நன் பல
பல் வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ,
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க


நால் வகைப் படைகளின் இயக்கம்


பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்,
375
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இதை புடையூ,
கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து உடன்
கடுங் காற்று எடுப்ப, கல் பொருதுஉரை இ,
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, சினம் சிறந்து,
380
கோலோர்க் கொன்று, மேலோர் வீசி,
மென் பிணி வன் தொடர் பேணாது, காழ் சாய்த்து,
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்;
அம் கண் மால் விசும்பு புதைய, வளி போழ்ந்து,
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்
385
செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன,
குரூஉ மயிர்ப் புரவி உராலின், பரி நிமிர்ந்து,
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்;
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்,
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய,
390
கொடி படு சுவல விடு மயிர்ப் புரவியும்;
வேழத்து அன்ன வெரு வரு செலவின்,
கள் ஆர் களமர் இருஞ் செரு மயக்கமும்;
அரியவும் பெரியவும், வருவன பெயர்தலின்


நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்


தீம் புழல் வல்சிக் கழல் கால் மழவர்
395
பூந் தலை முழவின் நோன் தலை கடுப்ப,
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்,
பல வகை விரித்த எதிர் பூங் கோதையர்,
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்,
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங் காய்,
400
நீடு கொடி இலையினர், கோடு சுடு நூற்றினர்,
இரு தலை வந்த பகை முனை கடுப்ப,
இன் உயிர் அஞ்சி, இன்னா வெய்து உயிர்த்து,
ஏங்குவனர் இருந்து, அவை நீங்கிய பின்றை,
பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர்,
405
மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர


முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்


இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால் நரைக் கூந்தலர்,
நன்னர் நலத்தர், தொல் முது பெண்டிர்
செந் நீர்ப் பசும் பொன் புனைந்த பாவை
410
செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன
செய்யர், செயிர்த்த நோக்கினர், மடக் கண்,
ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று
வார்ந்த, வாயர், வணங்கு இறைப் பணைத் தோள்,
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை,
415
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை,
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்,
மயில் இயலோரும், மட மொழியோரும்,
கைஇ, மெல்லிதின் ஒதுங்கி, கை எறிந்து,
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப,
420
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக


திருவிழாக் காட்சிகள்


ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்


மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போல,
425
கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி,
ஆடு துவன்று விழவின், நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்,
நாள்அங்காடி நனந் தலைக் கம்பலை.
430


செல்வர்கள் செல்லும் நிலை


வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன, சிவந்து நுணங்கு உருவின்,
கண் பொருபு உகூஉம் ஒண் பூங் கலிங்கம்,
பொன் புனை வாளொடு பொலியக் கட்டி,
திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை,
435
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி,
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெருந் தெரியல்,
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங் கோதை,
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ,
440
காலோர் காப்ப, கால் எனக் கழியும்
வான வண் கை வளம் கெழு செல்வர்


நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்


நாள் மகிழ் இருக்கை காண்மார், பூணொடு
தெள் அரிப் பொன் சிலம்பு ஒலிப்ப, ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை,
445
அணங்கு வீழ்வு அன்ன, பூந் தொடி மகளிர்,
மணம் கமழ் நாற்றம் தெரு உடன் கமழ,
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்,
தெண் கடல் திரையின், அசைவளி புடைப்ப,
450
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்,
மழை மாய் மதியின், தோன்றுபு மறைய


கோயில்களில் அந்தி விழா


நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,
455
மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,
அந்தி விழவில் தூரியம் கறங்க
460


பௌத்தப் பள்ளி


திண் கதிர் மதாணி, ஒண் குறுமாக்களை,
ஓம்பினர்த் தழீஇ, தாம் புணர்ந்து முயங்கி,
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு,
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேர் இளம் பெண்டிர்,
465
பூவினர், புகையினர், தொழுவனர், பழிச்சிச்
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்


அந்தணர் பள்ளி


சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி,
470
உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின்,
பெரியோர் மேஎய், இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்



அமணப் பள்ளி


வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்
475
பூவும் புகையும் சாவகர் பழிச்ச,
சென்ற காலமும், வரூஉம் அமயமும்,
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்,
சான்ற கொள்கை, சாயா யாக்கை,
480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர், நோன்மார்,
கல் பொளிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல் புரிச் சிமிலி நாற்றி, நல்கு வர,
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து,
செம்பு இயன்றன்ன செஞ் சுவர் புனைந்து,
485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து, ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூஞ் சேக்கையும்
குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற;


அறம் கூறு அவையம்


அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து,
490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி,
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்



காவிதி மாக்கள்


நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து,
ஆவுதி மண்ணி, அவிர் துகில் முடித்து,
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல,
495
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழி ஒரீஇ உயர்ந்து, பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்


பண்டங்கள் விற்கும் வணிகர்


அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி,
500
குறும் பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்,
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி,
மலையவும், நிலத்தவும், நீரவும், பிறவும்,
பல் வேறு திரு மணி, முத்தமொடு, பொன் கொண்டு,
505
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்


நாற் பெருங் குழு


மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்,
பழையன், மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங் குழுவும்
510



பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம்


கோடு போழ் கடைநரும், திரு மணி குயினரும்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,
பொன்னுரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
செம்பு நிறை கொண்மரும், வம்பு நிறை முடிநரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்,
515
எவ் வகைச் செய்தியும் உவமம் காட்டி,
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும், பிறரும், கூடி,
தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண் பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து,
520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
நால் வேறு தெருவினும், கால் உற நிற்றர



பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்


கொடும் பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்,
தண் கடல் நாடன், ஒண் பூங் கோதை
பெரு நாள் இருக்கை, விழுமியோர் குழீஇ,
525
விழைவு கொள் கம்பலை கடுப்ப


உணவு வகைகள்


பலவுடன்,
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறு படக் கவினிய தேம் மாங் கனியும்,
பல் வேறு உருவின் காயும், பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி,
530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்,
புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு, பிறவும்,
இன் சோறு தருநர் பல் வயின் நுகர
535


அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி


வால் இதை எடுத்த வளி தரு வங்கம்,
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
நனந் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக,
பெருங் கடல் குட்டத்துப் புலவுத் திரை ஓதம்
540
இருங் கழி மருவிப் பாய, பெரிது எழுந்து,
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்றே,
அல்அங்காடி அழி தரு கம்பலை.



இரவுக் கால நிலை


ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க, சினம் தணிந்து,
545
சென்ற ஞாயிறு, நன் பகல் கொண்டு,
குடமுதல் குன்றம் சேர, குணமுதல்,
நாள் முதிர் மதியம் தோன்றி, நிலா விரிபு,
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
காதல் இன் துணை புணர்மார், ஆய் இதழ்த்
550
தண் நறுங் கழுநீர் துணைப்ப, இழை புனையூஉ,
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைய,
நரந்தம் அரைப்ப, நறுஞ் சாந்து மறுக,
மென் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப,
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்
555
நெடுஞ் சுடர் விளக்கம் கொளீஇ, நெடு நகர்
எல்லை எல்லாம், நோயொடு புகுந்து,
கல்லென் மாலை, நீங்க


பரத்தையரது வாழ்க்கை


நாணுக் கொள,
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ்,
தாழ் பெயல் கனை குரல் கடுப்ப, பண்ணுப் பெயர்த்து,
560
வீழ் துணை தழீஇ, வியல் விசும்பு கமழ,
நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு,
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ,
மே தகு தகைய மிகு நலம் எய்தி,
565
பெரும் பல் குவளைச் சுரும்பு படு பல் மலர்,
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து,
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து,
நுண் பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய் பல கூட்டி, கவவுக் கரந்து,
570
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி,
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்,
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப, இன் துயில் துறந்து,
575
பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல,
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல் இல்,
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி,
580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான, கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப்
585
பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர


ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்


கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
590
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
595
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர


புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்


கணவர் உவப்ப, புதல்வர்ப் பயந்து,
600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற,
புலவுப் புனிறு தீர்ந்து, பொலிந்த சுற்றமொடு,
வள மனை மகளிர் குளநீர் அயர


சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று 
தெய்வத்திற்கு மடை கொடுத்தல்


திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி,
605
நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப
610


வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்


ஒரு சார்,
அருங் கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக் கூடு இன் இயம் கறங்க, நேர் நிறுத்து,
கார் மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்
சீர் மிகு நெடு வேள் பேணி, தழூஉப் பிணையூஉ,
மன்றுதொறும் நின்ற குரவை
615


இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்


சேரிதொறும்,
உரை யும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு,
முந்தை யாமம் சென்ற பின்றை
620


இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை


பணிலம் கலி அவிந்து அடங்க, காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங் கடை அடைத்து, மட மதர்,
ஒள் இழை, மகளிர் பள்ளி அயர,
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை,
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்
625
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக் கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப
630


மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்


பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய் கோல்
கூற்றக் கொல் தேர், கழுதொடு கொட்ப,
இரும் பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு,
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
635
தொடலை வாளர், தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி,
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்,
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல் மாண் சுற்றினர்,
640
நிலன் அகழ் உளியர், கலன் நசைஇக் கொட்கும்,
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப் புலி போல,
துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர்,
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த
645
நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர், ஊக்கருங் கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்,
அசைவிலர் எழுந்து, நயம் வந்து வழங்கலின்,
650
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்,
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி


விடியல்காலத்தில் மதுரை மாநகர்


போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு,
655
ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட,
660
பல் வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்ப,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சி,
புலர்ந்து விரி விடியல் எய்த, விரும்பி,
கண் பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய,
665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி,
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற,
சூதர் வாழ்த்த, மாகதர் நுவல,
670
வேதாளிகரொடு, நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய, அணி மயில் அகவ,
675
பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக்
கூட்டு உறை வய மாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்,
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி, நறவு மகிழ்ந்து,
மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த
680
பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன,
அம் மென் குரும்பைக் காய் படுபு, பிறவும்,
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ் செம்மலொடு நன் கலம் சீப்ப,
685
இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை


மதுரையின் சிறப்பு


மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை,
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி,
690
காய் சின முன்பின் கடுங் கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல் எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக் கலம், அனைத்தும்,
695
கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர,
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை


இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை


சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ
700
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப, மே தகப் பொலிந்து,
705
மயில் ஓரன்ன சாயல், மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர்ப் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர், கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்,
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத்
710
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து,
ஆய் தொடி மகளிர் நறுந் தோள் புணர்ந்து,
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி


காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்


திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும்
715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்,
வரிக் கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந் தெரியல்,
பொலம் செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக் கைத் தொடியொடு சுடர் வர,
720
சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்,
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி


வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்


வரு புனல் கல் சிறை கடுப்ப, இடை அறுத்து,
725
ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த


சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்


'வில்லைக் கவைஇக், கணைதாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின்;
கல் இடித்து இயற்றிய இட்டு வாய்க் கிடங்கின
730
நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்;
கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது போர்த்த
மாக் கண் முரசம் ஓவு இல கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்,
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய,
735
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்;
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந் தும்பை,
"நீர் யார்?" என்னாது, முறை கருதுபு சூட்டி,
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து,
740
வானத்து அன்ன வள நகர் பொற்ப,
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்,
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்;
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந் தெரியல்
745
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின்; பிறரும்
யாவரும் வருக; ஏனோரும் தம்!' என


மன்னனது பெருங் கொடை


'வரையா வாயில் செறாஅது' இருந்து,
'பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக!" என
750
இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி


மன்னனை வாழ்த்துதல்


களம்தோறும் கள் அரிப்ப,
மரம்தோறும் மை வீழ்ப்ப,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய,
755
நெய் கனிந்து வறை ஆர்ப்ப,
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா, வியல் நகரால்,
பல் சாலை முது குடுமியின்,
நல் வேள்வித் துறை போகிய
760
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும், சால்பும், செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,
765
அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்று இசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்,
பல் மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து, இனிது விளங்கி,
770
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாக,
கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர்,
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப,
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
775
மறம் மிகு சிறப்பின் குறு நில மன்னர்
அவரும், பிறரும், துவன்றி,
பொற்பு விளங்கு புகழ் அவை நிற் புகழ்ந்து ஏத்த,
இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும்
780
மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே!


தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை
மாங்குடி மருதனார் பாடியது.


மதுரைக் காஞ்சி முற்றும்

தனிப் பாடல்கள்


பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை, - அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ்.
1
சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால், - மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத
தண் தாரான் கூடல் தமிழ்?
2

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 17:51:28(இந்திய நேரம்)