தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கபிலர்


கபிலர்
13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்
18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்
25. குறிஞ்சி
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
38. குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர்
42. குறிஞ்சி
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக்
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி
விடரகத்து இயம்பும் நாட!- எம்
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர்
87. குறிஞ்சி
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர்
95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர்
100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்
106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே.
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர்
115. குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி-இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட!-நின் அலது இலளே.
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர்
121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ
142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்
153. குறிஞ்சி
குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர்
187. குறிஞ்சி
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர்
198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்
208. குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே,
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்
225. குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
241. குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின் அழுதன-தோழி!-
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்
246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம். - கபிலர்
249. குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென்-தோழி!-
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே?
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்
264.குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர்
288. குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர்
291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது. - கபிலர்
312. குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர்
355. குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர்
357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர்
361. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர்
385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:09:59(இந்திய நேரம்)