தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறைக்குடி ஆந்தையார்


சிறைக்குடி ஆந்தையார்
56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார்
57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்
62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்
132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே,
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார்
168. பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார்
222. குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார்
273. பாலை
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார்
300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:14:29(இந்திய நேரம்)