தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நக்கீரனார்


நக்கீரனார்

78. குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார்

105. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர்

143. குறிஞ்சி
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்;
பழியும் அஞ்சும், பய மலை நாடன்;
நில்லாமையே நிலையிற்று ஆகலின்,
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று, நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர்

266. பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

280. குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை -நக்கீரர்

368. மருதம்
மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:16:12(இந்திய நேரம்)