தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

படுமரத்து மோசிகீரனார்


படுமரத்து மோசிகீரனார்

33. மருதம்
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன்

75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார்

383. பாலை
நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:17:15(இந்திய நேரம்)