தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரணர்


பரணர்

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர்

24. முல்லை
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர்

36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர்

60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர்

73. குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர்

89. மருதம்
பா அடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர்

120. குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர்

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

165. குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை-
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்.

199. குறிஞ்சி
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர்

258. மருதம்
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால்-பெரும!-காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர்

259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர்.

292.குறிஞ்சி
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,
பெண் கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர்

298. குறிஞ்சி
சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!-
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர்

328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி
அலவன் சிறு மனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன்
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே,
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே.
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர்

393. மருதம்
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே,
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை,
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர்

399. மருதம்
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:17:39(இந்திய நேரம்)