தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாலை பாடிய பெருங்கடுங்கோ


பாலை பாடிய பெருங்கடுங்கோ

16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர்ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

135. பாலை
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.
'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

137. பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுறு தகவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

209. பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

231. மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

283. பாலை
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல்

398. பாலை
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:18:15(இந்திய நேரம்)