தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

91-100

91-100

91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்;
பழன வெதிரின் கொடிப் பிணையலளே.
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1

92
கருங் கோட்டு எருமைச் செங் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை, நும் ஊர் வருதும்
ஒண் தொடி மடந்தை! நின்னை யாம் பெறினே.
'நினக்கு வரைந்து தருதற்குக் குறை நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினால் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் செ

93
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
5
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3

94
மள்ளர் அன்ன தடங் கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே
கழனித் தாமரை மலரும்,
5
கவின் பெறு சுடர்நுதல் தந்தை, ஊரே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீள்கின்றான் சொல்லியது. 4

95
கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ,
நெடுங் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன், பகலும்,
படர் மலி அரு நோய் செய்தனன், எமக்கே.
உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கி, பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. 5

96
அணி நடை எருமை ஆடிய அள்ளல்,
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகள், இவள்;
பழன ஊரன் பாயல் இன் துணையே.
பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது. 6

97
பகன்றை வால் மலர் மிடைந்த கோட்டைக்
கருந் தாள் எருமைக் கன்று வெரூஉம்,
பொய்கை, ஊரன் மகள், இவள்;
பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே.
புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், 'உளது' என்று புலந்த தலைமகளைப் புலவி நீக்கிய தலைமகன், புணர்ச்சியது இறுதிக்கண், தன்னுள்ளே சொல்லியது. 7

98
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண் தொடி மட மகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே?
புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8

99
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை,
கழனி எருமை, கதிரொடு மயக்கும்
பூக் கஞல் ஊரன் மகள், இவள்;
நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே.
தோழி முதலாயினோர் தலைமகன் கொடுமை கூறி விலக்கவும் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது. 9

100
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை,
மணல் ஆடு சிமையத்து, எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.
வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழி, தலைமகள் இயற்பட மொழிந்த திறம் தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:51:03(இந்திய நேரம்)