தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

241-250

241-250

241
நம் உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே!
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1

242
அறியாமையின், 'வெறி' என மயங்கி,
அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால்,
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்ப,
5
சேய் மலை நாடன் செய்த நோயே.
தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2

243
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்;
அது மனம் கொள்குவை, அனை! இவள்
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே.
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3

244
அம்ம வாழி, தோழி! பல் மலர்
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்,
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே?
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4

245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும்ஆயின்,
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5

246
வெறி செறித்தனனே, வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ,
..................................................................................................................
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து,
5
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்:
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?
வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7

248
பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி,
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்,
நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே!
'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8

249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9

250
பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்;
ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள்
5
பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே.
'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு உரைப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:53:12(இந்திய நேரம்)