தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

261-270

261-270

261
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்?
அதுவே மன்ற வாராமையே.
அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி, பிற்றை ஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்ப, தலைமகட்குச் சொல்லியது. 1

262
சிறு தினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே?
'வரைந்து கொள்ள நினைக்கிலன்' என்று வேறுபட்ட தலைமகள், 'அவன் நின்மேல் விருப்பமுடையன்; நீ நோகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 2

263
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி! என் நலனே!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீண்டமை அறிந்த தலைமகள், 'நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 3

264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பாற் புணரும்
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே!
வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4

265
புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என் நீத்தோனே.
பரத்தை இடத்தானாக ஒழுகுகின்ற தலைமகன் விடுத்த வாயில்மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. 5

266
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடையை மன்ற
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே!
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6

267
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி,
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலைப் பேணி,
5
பண்பு இல சொல்லும், தேறுதல் செத்தே.
'தலைமகளைத் தலைமகன் வரைவல்' எனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி, அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 7

268
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்
நல் மலை நாடன் பிரிதல்
5
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே?
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8

269
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவின் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை
இணை ஈர் ஓதி! நீ அழ
5
துணை நனி இழக்குவென், மடமையானே.
குறை நயப்பக் கூறி தலைமகளைக் கூட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 9

270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து,
5
தாம் வந்தனர், நம் காதலோரே.
வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:53:28(இந்திய நேரம்)