தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

281-290

281-290

281
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய, பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி
பெருந் தோள் காவல் காட்டியவ்வே.
ஆயத்தோடு விளையாட்டு விருப்பினால் பொழிலகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன், அவள் புனங்காவற்கு உரியளாய் நின்றது கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 1

282
சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின; வாரல்
5
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.
இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2

283
வன்கட் கானவன் மென் சொல் மட மகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புறச் சிறு கிளி கடியும் நாட!
பெரிய கூறி நீப்பினும்,
5
பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே.
தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3

284
அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே.
தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4

285
பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள்
மென் தினை நுவணை உண்டு, தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட!
வீங்குவளை நெகிழப் பிரிதல்
5
யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5

286
சிறு தினை கொய்த இருவி வெண் கால்
காய்த்த அவரைப் படு கிளி கடியும்
யாணர் ஆகிய நல் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும்;
5
கவரும் தோழி! என் மாமைக் கவினே.
உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃது ஒழிந்து, தானே வரைவிடை வைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப்பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன், 'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்ல

287
நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.
'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7

288
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம்? நெஞ்சே! காமர்
மெல் இயல் கொடிச்சி காப்பப்
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே.
'கிளிகள் புனத்தின்கண் படியாநின்றன' என்று, தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை அறிந்த தலைமகன் உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 8

289
'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப்
பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ!
இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9

290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே.
காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10

உரை

Home
HOME

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:53:45(இந்திய நேரம்)