Primary tabs
பதிற்றுப் பத்துத் திரட்டு
2
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு
ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப,
நெடு மதில், நிரை ஞாயில்,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
ஒல்லா மன்னர் நடுங்க, 15
நல்ல மன்ற- இவண் வீங்கிய செலவே!
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர்
மேற்கோள்]