தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


இந்தவுரை, பலவிடத்துப் பொழிப்புரையாயும் சிலவிடத்துப் பதவுரையாயும் சிலவிடத்துக் கருத்துரையாயும், சிறிதும் புலப்படாத சொற்களின் பழைய வடிவங்களைப் புலப்படுத்தியும், உரிய இடங்களில் இலக்கணக்குறிப்புக்களைப் பெற்றும், சிலவிடத்து மிக அழகான பதசாரத்துடன் கூடியும், விளங்காத சிலவற்றைத் தக்க தமிழ்நூல் மேற்கோள்களாலும் வேதம் உபநிடதம் முதலியவற்றின் கருத்துக்களாலும் விளக்கியும் மிக விரிவாக அமைந்துள்ளது. நுணுகி ஆராயின் திருக்குறளுரையிலும் இவ்வுரையிலும் ஒத்த கருத்துக்களும் ஆசிரியர் பரிமேலழகருடைய கொள்கைகளும் பல காணலாகும்.

இந்நூல் 1918-ஆம் வருஷத்தில் முதன்முறையாகப் பதிப்பிக்கப்பெற்றது. அப்பதிப்பைப்பற்றிய வேறு சில செய்திகளை அதன் முகவுரையிற் காணலாம்.

அதன்பின் வேறு கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை. ஆயினும் பலகாலமாகச் செய்துவந்த ஆராய்ச்சியால் இப்போது இந்நூல் அடைந்த திருத்தங்கள் சில. முதற்பதிப்பு வெளிவந்த பின்பு அவ்வப்பொழுது இந்நூற் செய்யுட்பகுதிகள் சிலவற்றிற்கு எழுதி வைத்திருந்த குறிப்புக்கள் இப்பதிப்பில் நூலுக்குப் பின்பு 'விசேடக்குறிப்பு' என்னும் தலைப்பின்கீழ்ப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. படிப்பவர்கள் எளிதில் இந்நூலின் அருமையையும் சுவையையும் அறியும் பொருட்டு இதன்பாலுள்ள செய்யுட்களின் பொருட்சுருக்கம் ஒருவாறு பரிமேலழகருரையைத் தழுவி வசனமாக எழுதி இப்போது சேர்க்கப்பட்டிருக்கின்றது. இப்பதிப்பிற்கு உடனிருந்து உதவி செய்தவர்கள் சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்வான் வி. மு. சுப்பிரமணிய ஐயரும், வித்வான் கி. வா. ஜகந்நாதையரும் ஆவர்.

இதிற் காணப்படும் பிழைகள் என்னுடைய மறதி. அயர்ச்சி முதலியவற்றால் நேர்ந்தனவென்று எண்ணிப் பொறுத்துக்கொள்ளும்படி அன்பர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

ஒன்றுக்கும் பற்றாத என்னை இம்முயற்சியிற் புகுத்தி இந்த அளவிலாவது 'இந்நூல் வெளிவரும்படி செய்தருளிய திருவாலவாய்ப்பெருமான் பெருங்கருணையைச் சிந்தித்து வந்திக்கின்றேன்.

'தியாகராச விலாசம்'
திருவேட்டீசுவரன் பேட்டை
சென்னை, 24-8-1935.
இங்ஙனம்,

வே. சாமிநாதையர்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:47:53(இந்திய நேரம்)