தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


அன்பர்கள் வந்து வழிபடுதலும், மாலைதோறும் அக்குன்றத்தின் அடியில் உறைவோர் விண்ணுலக இன்பத்தையும் விரும்பாரென்பதும், அதிலுள்ள பலவகை விசேடங்களும், மதுரையின் வளமும் செவ்வனே கூறப்பெற்றுள்ளன.

11. நல்லெழுனியார்:- இவராற் பாடப்பெற்றது திருமாலுக்குரியதாகிய 13-ஆம் பாடல். இதில் திருமாலின் திருவுருவம் முதலியவற்றைப் பலபடப் பாராட்டியிருக்கும் பகுதிகளும் அவரைத் துதித்திருக்கும் பாகங்களும் அன்பர்களுடைய மனத்தை ஆநந்த வெள்ளத்தில் அழுத்தும். அதிகமானெடுமானஞ்சியின் பரம்பரையோர் பெயர்களில் 'எழுனி' என்பது விரவிவருதலால், இவர் அவன் பரம்பரையினரோவென்று நினைத்தற்கிடமுண்டு. இவர் பெயர் நல்லெழினியென்றும் வழங்கும்.

12. நல்வழுதியார்:- இவராற் பாடப்பெற்றது வையைக்குரியதான 12-ஆம் பாடல். சையமலையிலிருந்து மரங்கள் பலவற்றை வையை அடித்துக்கொண்டு வருதல், அது மதுரையின் மதிலைப் பொருதல், அதிற் புதுநீர் பெருகி வருதலைக் கேட்ட மகளிர் தலைவர்களுடன் ஊர்திகளில் ஏறிச் செல்லல், அதுகண்ட பிறமகளிர் தம்முட்கூறுங் கூற்றுக்கள், சனங்களின் முழக்க மிகுதி, பலவகை வாச்சிய ஒலிகள், சென்றோர் தம்மவர்க்கு அங்கங்கே நிகழ்பவற்றை உவந்து காட்டிக் கூறல், நீர் விளையாட்டின் வகை முதலியன இதில் நன்றாகக் கூறப்பெற்றுள்ளன. வழுதியாரென்பது இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவரென்பதை அறிவிக்கின்றது.

13. மையோடக் கோவனார்:- இவர் வையைக்குரியதாகிய 7-ஆம் பாடலை இயற்றியவர். வையை பல பொருள்களை அடித்துக் கொண்டு பெருகிவருவதற்குப் பாண்டியர்சேனை பகைமேற் செல்லுதலையும் அப்பெருக்கால் வேறுபட்ட இடங்களுக்கு அச்சேனையால் வேறுபட்ட பகைப்புலங்களையும் உவமை கூறியிருத்தலை நோக்கும் பொழுது இவர் இராசபக்தியுடையவரென்பது புலனாகும். இவர் கூறிய வையைப் பெருக்கின் செயல்களும், புனல் விளையாட்டுவகையும், திருமருத முன்றுறைச் சிறப்பும், பிறவும் மிக வியக்கற்பாலன. இவர் புனல் விளையாட்டிற்குக் கருவியாகிய ஓடத்தை எந்த வகையாகவோ புனைந்து கூறியதுபற்றி இப்பெயர் பெற்றிருக்கலாமென்று ஊகித்தற்கிடமுண்டு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:48:55(இந்திய நேரம்)