Primary tabs
வகையாலே தலைவன் தனக்குத் தந்தவை என அப் பேதை அறியாள்போலும். வையையில் வெள்ளம் கரைபுரண்டோடியது; அதன்கண் நீராடும் விருப்பம் மக்கள் மனத்தே கரைபுரண்டோடியது; மதுரையிலுள்ளோர் அனைவரும் வையையை எய்தினர்; பிறமகளிர் எத்தகைய ஆடையுடுத்துள்ளனர்! எத்தகைய அணிகலன் அணிந்துள்ளனர்? என்று கூர்ந்து காணும் தம்மியல்புக் கேற்ப அத் தலைவியின் தோழியர் பிறர்பிறர் ஆடையணிகலன்களை நோக்கி வந்தனர்; அக் கூட்டத்திலே முற்கூறப்பட்ட பரத்தையும் தனக்குத் தலைவன் தந்த அணிகலன்களை அணிந்துகொண்டு வந்து நின்றாள்; கூர்த்த நோக்குடைய அத்தோழியர் அவ்வணிகலன் தலைவியினுடையவாதலை அறிந்து கொண்டனர்; அத் தோழியர் தம்முள் அவளைச் சுட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்; இந் நிகழ்ச்சியை ஆண்டு நின்ற தலைவனும் அறிந்துகொண்டான்; அவனே திருடன் என்பதை அவன் சமழ்த்த முகம் தோழியர்க்குக் காட்டிக்கொடுத்துவிட்டது; இஃதுணர்ந்த பரத்தை மெல்ல நகர்ந்து கூட்டத்துட்புக்கு மறைந்தாள்; அத் தோழியரும் அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்; அதுகண்ட பரத்தை அவரை எதிர்த்துப் பேசத் தொடங்கினாள்; இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நிகழும் உரையாட்டங்கள் மிகமிக இன்பமுடையனவாகும்; அவற்றை ஆண்டுக் காண்க.
இனி, 6 ஆம் பாடலின்கண் முருகவேளுக்கும் தேவசேனைக்கும் இடையே நிகழும் சொல்லாடலும், பின்னர் வள்ளியின்பாலகப்பட்டுச் செவ்வேள் படும்பாடும், மண்ணவர் மகளாகிய வள்ளியின் படையும் வானவர் மகளாகிய தேவசேனையின் படையும் எதிர்ந்து செய்யும் போரும் பிறவும் மிகமிகக் களிப்பூட்டுவனவாம்.
இனி, 9 ஆம் பாடலின்கண் ஆசிரியர் குன்றம்பூதனார் "நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்" என வடமொழி வாணரை விளித்துத் தமிழ்மொழிக்கே சிறந்துரிமையுடைய தள்ளாப் பொருளியல்பில் அகப்பொருட்பகுதியாகிய களவு கற்பென்னும் இருவகை ஒழுக்கத்தினும் களவே சாலச் சிறந்தது என ஏதுக்களானே நிலைநிறுத்தி, அத் தமிழை ஆராய்ந்தமையான், கடவுளரில் வைத்து முருகன் சிறந்தவாறும், தேவசேனையினும் களவானே மணக்கப்பட்ட வள்ளியம்மை சிறந்தவாறும் ஏக்கழுத்தம்பட எடுத்துரைக்கும் பகுதி இன்பமிக்கது.
இனி, ஆசிரியர் நல்லந்துவனார் 11 ஆம் பாடலின்கட்கூறும் ஒளிநூல் (சோதிடம்) பகுதியவாகிய கோள்நிலை நாணிலைகள்