தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


ஆராய்ச்சிக்குரியதாம். இப்பாட்டின்கண் இவர் கூறும் கோணிலை நாணிலைகளை நுண்ணிதின் ஆராய்ந்த திருவாரூர் சோமசுந்தரதேசிகர் என்பார், அதன்கட் கூறப்பட்டபடி கோணிலை நாணிலை நிகழ்ந்த காலம் கி.மு. 161, ஆகிய கலி - 2941, பிரமாதி யாண்டு ஆவணித் திங்கள் 12 ஆம் நாளாகிய வியாழக் கிழமை என்று முடிவு செய்துள்ளனர். இம் முடிவு இற்றை நாள்காறும் பலரானும் ஒப்புக்கொள்ளப்பட்டவொன்றாம். இதனால் இப் பரிபாடலின் தொன்மை நலம் உணரற்பாலதாம்.

இனி, இப் பரிபாடலின்கண் 19 ஆம் பாடலாலே அந்நாளிலே தமிழ் மக்கள் திருக்கோயில் வழிபாடு செய்த முறையும் திருக்கோயில் விழா நிகழ்ச்சிகளும் திருக்கோயில் நிலைமைகளும் நன்குணரப்படும்.

மதுரை வேந்தன் தனது அரசவைச் சுற்றம் சூழத் திருப்பரங்குன்றம் சேர்தலும், மக்கள் துறக்கம் புகுவார்போன்று பெரு மகிழ்ச்சியுடையராய்த் திருப்பரங் குன்றத்திற்கு விரைதலும், அரசன் சிறந்த அமைச்சர் முதலியோரொடு திருமலை மீதேறிச் செவ்வேளின் திருக்கோயிலை வலம்வரும் காட்சியும், அம்மன்னனோடு வந்த யானை குதிரை தேர் முதலியன அம் மலையடியில் குழுமி நிற்றலும், விழாக் காண வந்தோர் குரங்குகளுக்குப் பண்ணிகாரம் வழங்குதலும், யானைகட்குக் கரும்பு வழங்குதலும், ஆடல் பாடல் முதலியன நிகழ்தலும், அம் மலையின்கண் இராமாயணம் முதலிய கதைகளைப் பற்றிய எழிலோவியம் தீட்டப்பட்ட சித்திரச்சாலை திகழ்ந்திருத்தலும், அதனுட் புகுந்த காதலர்கள் அவ் வோவியங்கள் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் வினவுதலும் விடையிறுத்தலும், கண்கூடாகக் காட்டப்படுகின்றன.

பேதைச் சிறுமி ஒருத்தி பிறங்கலிடைப் புகுந்து வழி தவறி அலமந்து நிற்றலும், சுனையின்கட் கிடக்கும் உதிர்ந்த தளிரை ஐந்தலை அரவெனவும் அதன் குட்டிகள் எனவும் எண்ணி மடவார் மயங்குதலும், முருகப்பெருமான் திருக்கோயிற்குக் கொடியேற்றும் களிற்றுயானை உண்ட மிச்சிலை மகளிர் கடவுட்டன்மையுடையதாகக் கருதி உண்ணலும் பிறவும் அறியலாம்.

இனி 11 ஆம் பாடலின்கண், மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் சிவாகமங்களை யுணர்ந்த சான்றோர் அந்நாளிற்குத் தெய்வமாகிய சிவபெருமானுக்குத் திருவிழாத் தொடங்குதலும், அவ்வமயம், அம்பா வாடும் கன்னிமகளிர் சடங்கறிந்த முதுபார்ப்பனிமார் நோற்கு முறைமை காட்டப் பனியையுடைய வைகறைப் பொழுதிலே வையையின்கண் நீராடிக் குளிர்வாடை வீசுதலான்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:58:10(இந்திய நேரம்)