தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal


கரையின்கண் உறையும் அந்தணர் வேதநெறியால் வளர்த்த தீயினைத் தொழுது வணங்கி அத்தீயின் அருகில் நின்று தமது ஈர ஆடையைப் புலர்த்துதலும், மேலும் அம்மகளிர் தைத் திங்களிலே தத்தம் தாயர் மருங்கே நின்று தவமாகிய தைந்நீராடுதலும் அறியலாம்.

இவ்வாறாக இப் பரிபாடலின்கண் பண்டைத் தமிழக மாந்தர் பழக்க வழக்கங்கள் பற்பலவும் உணரலாம்.

இனி, இப் பரிபாடலின்கண் பண்டைக் காலத்துத் தமிழர்கள் ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் முதலிய கலைநலத்திற் சிறந்து திகழ்ந்தமைக்குச் சான்றுகள் பற்பல ஆண்டாண்டுக் காணப்படுகின்றன.

மதுரையில் புதுநீர் வந்து பெருகிற்றாக; அச் செய்தியை அறிந்த மதுரையிலுள்ள மகளிரும் மைந்தரும் அணிகலன்களாலும், நறிய மலர் மாலைகளானும், தம்மை ஒப்பனை செய்து கொண்டு அம் மூதூரின் தெருக்களிலே வந்து நெருங்கிப் புது நீராட்டிற்குச் செல்லாநிற்ப, அப்பொழுது களிற்றுயானையிற் சில காளையர் ஏறிச் சென்றனர்; அக் களிற்றுயானை மடந்தையர் ஊர்ந்து வருமொரு பிடியானையினைக் கண்டு மையலுற்றுப் பாகர் சொற் கேளாது ஒரு நெடிய மாடமாளிகையின் அருகே சென்று நின்றுவிட்டது; அப் பிடிதானும் அக் களிற்றின்மேற் கழிகாம முடைத்தாய்ப் பாகர்க் கடங்காது அம் மாடத்தினை அணுகிற்று; அம் மாடத்தின் முகப்பே பாய்கின்ற நிலையிலே உள்ளதொரு புலியுருவம் சிற்பநூல் வல்லோராற் செய்து வைக்கப்பட்டிருந்தது; அது சிற்பப் புலி என்பதனை உணராமல் பிடியானை அதனை மெய்ப்புலியே என்றும், அது தன் காதற் களிற்றைப் பாய்ந்து கொல்லும் என்றும், அஞ்சிக் கையை உயரத் தூக்கிப் பிளிறிச் சிதைத்தது. இச் செய்தியால் அக்காலத்தே உயிருடைய மெய்யுருவம் போன்றே கண்டோர் கருதத் தகுந்த சிற்ப உருவங்களைச் சமைத்த சிற்பநூற் புலவர் இருந்தமை புலனாகின்றது.

இனி, 19 ஆம் பாடலின்கண் நாண்மீன்களையும் தாரகைகளையுமுடைய சுடர்ச் சக்கரம் சித்திரச் சாலையிலே தீட்டப்பட்டிருந்த செய்தியும், இந்திரன் அகலிகையைக் காமுற்றுச் சென்று கவுதம முனிவன் சாபத்திற்கிலக்கான செய்தியை அவ்வோவியச் சாலையிலே தீட்டப்பட்டிருந்த செய்தியும், இரதி காமன் உருவங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியும் அறியப்படுதலானே அக் காலத்தே ஓவியக்கலை சிறந்திருந்தமை உணர்கின்றோம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:58:19(இந்திய நேரம்)