தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார்

ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார்
13. பாலை
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
20
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல, வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச் சாத்தனார்
224. முல்லை
செல்க, பாக! எல்லின்று பொழுதே
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
5
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
10
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
15
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என,
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
அருங் கடி வியல் நகர் நோக்கி,
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:40:39(இந்திய நேரம்)