தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குடவாயிற் கீரத்தனார்

குடவாயிற் கீரத்தனார்
35. பாலை
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
5
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
10
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து,
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
துஞ்சா முழவின் கோவற் கோமான்
15
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார்
44. முல்லை
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
5
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
10
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
15
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற் கீரத்தனார்
60. நெய்தல்
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
5
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
10
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற்
கொற்றச் சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய
15
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார்
79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
119. பாலை
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
5
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
10
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
15
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
20
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார்
129. பாலை
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
5
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
10
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
15
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின்,
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. 
- குடவாயிற் கீரத்தனார்
287. பாலை
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
5
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
10
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
315. பாலை
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
5
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
அறியாமையின் செறியேன், யானே;
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
10
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய்,
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
15
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில் கீரத்தனார்
345. பாலை
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
5
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
10
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
15
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
20
கல் கண் சீக்கும் அத்தம்,
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
366. மருதம்
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி,
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன்
5
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின்,
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர்
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ,
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி,
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு,
10
நரை மூதாளர் கை பிணி விடுத்து,
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன,
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு,
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை
15
நீ தற் பிழைத்தமை அறிந்து,
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
385. பாலை
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
என் ஓரன்ன தாயரும், காண,
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
5
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
10
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
15
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:54:25(இந்திய நேரம்)