தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குன்றியனார்

குன்றியனார்
40. நெய்தல்
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
5
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
10
அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
வாரற்கதில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
15
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
அகமடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார்
41. பாலை
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
5
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
10
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
15
அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:55:11(இந்திய நேரம்)