தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொல் கபிலன்

தொல் கபிலன்
282. குறிஞ்சி
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
5
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
10
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
15
யாயும், 'அவனே' என்னும்; யாமும்,
'வல்லே வருக, வரைந்த நாள்!' என,
நல் இறை மெல் விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 14:58:16(இந்திய நேரம்)