தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நன்பலூர்ச் சிறு மேதாவியார்

நன்பலூர்ச் சிறு மேதாவியார்
94. முல்லை
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
5
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
10
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச் சிறு மேதாவியார்
394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
5
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
10
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:00:29(இந்திய நேரம்)