மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன், மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன், மதுரை
இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக்
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
காவலர் அறிதல் ஓம்பி, பையென
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக,
தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை
இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
என் ஆவதுகொல் தானே முன்றில்,
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
'யானை வவ்வின தினை' என, நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி
சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன்
சேந்தன் கூத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:08:32(இந்திய நேரம்)