தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை எழுத்தாளன்

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார், மதுரை எழுத்தாளன்
84. முல்லை
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
5
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
10
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
15
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து,
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே!
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
207. பாலை
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம்
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
5
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
10
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
15
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:08:47(இந்திய நேரம்)