தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தானார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தானார்
53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
10
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
15
பொருளே காதலர் காதல்;
'அருளே காதலர்' என்றி, நீயே.
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
134. முல்லை
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
5
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
10
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
5
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
10
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
15
இனையல் என்றி; தோழி! சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
20
இன் இளவேனிலும் வாரார்,
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
306. மருதம்
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
5
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல்
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட
10
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி செய்து எம்
15
மணல் மலி மறுகின் இறந்திசினோளே.
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
320. நெய்தல்
ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ,
திமிலோன் தந்த கடுங் கண் வய மீன்,
தழை அணி அல்குல் செல்வத் தங்கையர்,
விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும்
5
கானல் அம் சிறுகுடி, பெரு நீர்ச் சேர்ப்ப!
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்
அலர் வாய் நீங்க, நீ அருளாய் பொய்ப்பினும்,
நெடுங் கழி துழைஇய குறுங் கால் அன்னம்
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்,
10
தடவு நிலைப் புன்னைத் தாது அணி, பெருந் துறை
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
வண்டற் பாவை சிதைய வந்து, நீ
தோள் புதிது உண்ட ஞான்றை,
சூளும் பொய்யோ, கடல் அறி கரியே?
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:10:36(இந்திய நேரம்)