மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும்
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.
சேட்படுத்து வந்த தலைமகற்குத்
தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன்
இளந்தேவனார்
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி,
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத்
தண் துளி அசைவளி தைவரும் நாட!
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது,
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்
நீடலர் ஆகி வருவர், வல்லென;
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!
இரவுக்குறிக்கண் தலைமகற்குத்
தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன்
இளந்தேவனார்
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந் தலை இடறி, பானாள்
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்,
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி
சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட வாணிகன்
இளந்தேவனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:11:45(இந்திய நேரம்)