தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்

மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
327. பாலை
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
நன்பகல் அமையமும் இரவும் போல,
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
5
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
10
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
15
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
கோல் கழிபு இரங்கும் அதர,
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:15:06(இந்திய நேரம்)