தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், பேரிசாத்தனார்

வடம வண்ணக்கன் பேரிசாத்தனார், பேரிசாத்தனார்
38. குறிஞ்சி
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
5
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
10
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
15
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கணஃது எம் ஊர்' என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
5
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
10
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
15
மாரி மாலையும் தமியள் கேட்டே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
242. குறிஞ்சி
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச்
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
5
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம்,
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
10
அறியா வேலற் தரீஇ, அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள்,
15
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
20
சாந்த மென் சினை தீண்டி, மேலது
பிரசம் தூங்கும் சேண் சிமை
வரையக வெற்பன் மணந்த மார்பே!
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார்
268. குறிஞ்சி
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
5
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
10
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
305. பாலை
பகலினும் அகலாதாகி, யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
5
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை,
பருகுவன்ன காதலொடு திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
அருளிலாளர் பொருள்வயின் அகல,
10
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன் உளெனோ தோழி! தானே
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
15
கனை எரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:18:42(இந்திய நேரம்)