தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வெறிபாடிய காமக் கண்ணியார்

வெறிபாடிய காமக் கண்ணியார்
22. குறிஞ்சி
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
5
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
10
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
15
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
20
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார்.
98. குறிஞ்சி
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னாஆக,
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
5
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி,
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
10
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
15
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
20
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும், வாடிய மேனி
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
25
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
30
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:20:22(இந்திய நேரம்)