தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆஅய் அண்டிரன்

ஆஅய் அண்டிரன்
69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
5
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
10
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
15
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
20
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
152. குறிஞ்சி
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
5
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை,
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
10
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
15
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச்
20
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேய் அமைக் கண் இடை புரைஇ,
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
198. குறிஞ்சி
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
5
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
10
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
15
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:23:15(இந்திய நேரம்)