தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொங்கர்

கொங்கர்

 

79. பாலை
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
5
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
10
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
15
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
கல் பிறங்கு அத்தம் போகி,
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்

 

253. பாலை
'வைகல்தோறும் பசலை பாய, என்
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
5
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து,
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
10
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து,
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
15
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
20
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
25
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர்

 

368. குறிஞ்சி
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
5
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
10
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
கழியாமையே வழிவழிப் பெருகி,
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
15
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:32:15(இந்திய நேரம்)