தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வானவன்

வானவன்

 

33. பாலை
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
5
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
10
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
15
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள்,
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
செய்வினை ஆற்றுற விலங்கின்,
20
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

 

77. பாலை
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
5
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
10
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
15
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.- மருதன் இள நாகனார்

 

143. பாலை
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
5
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை முழங்கும்
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
10
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
15
தண் கமழ் நீலம் போல,
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்

 

159. பாலை
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
5
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
10
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
15
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
20
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார்

 

213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
5
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
10
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
15
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள்
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
20
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை,
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
அறல் என நெறிந்த கூந்தல்,
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார்

 

309. பாலை
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
5
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
காடு மிக நெடிய என்னார், கோடியர்
10
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
15
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
தண் பெரு படாஅர் வெரூஉம்
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

 

381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
10
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
15
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
20
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:57:02(இந்திய நேரம்)