தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேளிர்

 
வேளிர்

 

135. பாலை
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
5
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
10
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர்

 

206. மருதம்
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப,
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம்,
5
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத்
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர்
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து
10
ஆராக் காதலொடு தார் இடை குழைய,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து,
அடுபோர் வேளிர் வீரை முன்துறை,
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
15
பெரு பெயற்கு உருகியாஅங்கு,
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

 

258. குறிஞ்சி
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட்
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
5
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
மாய இருள் அளை மாய் கல் போல,
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
10
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
காமம் கைம்மிக உறுதர,
15
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர்

 

331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
5
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
10
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 15:57:35(இந்திய நேரம்)