தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அம்ம வாழி தோழி நம் மலை

அம்ம வாழி தோழி நம் மலை

 

388. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
5
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,
10
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
15
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
20
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
25
காட்டு மான் அடி வழி ஒற்றி,
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:24:11(இந்திய நேரம்)