தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரம் போழ் அவ் வளை தோள் நிலை

அரம் போழ் அவ் வளை தோள் நிலை

 

125. பாலை
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
5
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய யானை போல,
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
10
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
15
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
20
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர் போல,
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:25:24(இந்திய நேரம்)