தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருந் தெறல் மரபின்

அருந் தெறல் மரபின்

 

372. குறிஞ்சி
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
5
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து,
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
10
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
15
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:26:07(இந்திய நேரம்)