தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அவ் விளிம்பு உரீஇய

அவ் விளிம்பு உரீஇய

 

371. பாலை
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
5
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
10
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
வீ தேர் பறவை விழையும்
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:27:00(இந்திய நேரம்)