தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அன்று அவண் ஒழிந்தன்றும்

அன்று அவண் ஒழிந்தன்றும்

 

19. பாலை
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
10
சேயிதழ் அனைய ஆகி, குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
15
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:29:09(இந்திய நேரம்)