தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இகுளை கேட்டிசின்

இகுளை கேட்டிசின்

 

138. குறிஞ்சி
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
குவளை உண்கண் தெண் பனி மல்க,
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
5
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
10
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
15
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
நல் நிறம் மருளும் அரு விடர்
20
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 16:30:56(இந்திய நேரம்)